நீலகிரி: அடர்ந்த வனமான உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு குடியிருப்பு பகுதிகளின் அருகே உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளை வேட்டையாடி செல்வது வழக்கமாக கொண்டுள்ளன.
இந்நிலையில் உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வந்துள்ளது. அப்போது குடியிருப்பு பகுதியில் இருந்த வளர்ப்பு நாயை கண்ட சிறுத்தை மிகுந்த ஆக்ரோஷத்துடன் துரத்திச் சென்று நாயை வேட்டையாடியது.
இந்த காட்சிகள் குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி குடியிருப்புவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் மீண்டும் அதே சிறுத்தை குடியிருப்பு பகுதிக்கு வந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட பதுங்கி வந்துள்ளது. ஆனால் அங்கு நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது. இந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
எனவே வனத்துறையினர் இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Watch:அசுரவேகத்தில் சறுக்கிய பைக்! அசால்ட்டாக எஸ்கேப் ஆன இளைஞர்