நீலகிரி வனப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்தது. இந்நிலையில் உதகை அருகே உள்ள பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் புலி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நீலகிரி வனக்கோட்ட அலுவலர் தப்பாலா குருசாமி, உதவி வனப்பாதுகாவலர் சரவணன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் இறந்து கிடந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த ஆண் புலிக்கு சுமார் 5 வயது இருக்கும் என்பதும், விஷத்தை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, புலியின் இறப்பிற்கு காரணமானவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் முதுமலையிலிருந்து மோப்பநாய் வரவழைக்கபட்டு துப்பறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.