தமிழ்நாடு முழுவதும் பரவிவரும் கரோனா நோய்த்தொற்று குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிவடைந்த பிறகு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், ”நீலகிரி மாவட்டத்தில் தற்போதுவரை மூன்று பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இன்றுமுதல் (மே 13) தனிக்கடைகள் அனைத்தும் காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை திறந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறிய அளவிலான குளிரூட்டி இல்லாத துணிக் கடைகள் ஊரக, நகர்ப்புறப் பகுதிகளில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் வசிக்கும் பகுதிகள் தொடர்ந்து சீல்வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றன. வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயம் ஏழு நாள்கள் எல்லைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தற்போதுவரை மாவட்டத்தில் 373 கர்ப்பிணிகளுக்கு, கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இன்றுமுதல் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. இதற்காக ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பேக்கரியில் திடீர் சோதனை: ரூ.1 லட்சம் மதிப்பில் காலாவதியான உணவு பொருள்கள் பறிமுதல்