கரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதிலும் பணிமனைகளில் அனைத்து பேருந்துகளும் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்துகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் முகக்கவசம் அணிந்து பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு 60 விழுக்காடு பயணிகளுடன் 50 விழுக்காடு பேருந்துகள் வரை இயக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குன்னூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம புறங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் குன்னூர் நகர பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால், அதிகளவில் பேருந்துகளை கிராமப் பகுதியில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் மரணம்!