நீலகிரி: கூடலூரைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள்,புலிகள், சிறுத்தை மற்றும் கரடி உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவது வழக்கமாகும்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை பகுதியில் வசித்து வருபவர் ப்ரோஸ், இவருக்குச் சொந்தமான தோட்டத்திற்குள் இன்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று வனப்பகுதியிலிருந்து வெளியேறி நுழைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததன் பேரில்,சம்பவ இடத்தில் காட்டு யானை இறந்த இடத்தில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை தோட்டத்திலிருந்த மரத்தை உடைத்துச் சாப்பிட முயன்றுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக மரம் சாய்ந்து அங்குள்ள மின்கம்பியின் மீது விழுந்தது. இதில் யானையின் துதிக்கை மின் கம்பியில் படவே யானை மீது மின்சாரம் தாக்கி யானை சம்பவ இடத்திலேயோ பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து தோட்ட உரிமையாளர் ப்ரோஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் ஓம்கர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் சம்பவத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது உயிரிழந்த காட்டு யானைக்குப் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை காட்டுயானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்த அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்