நீலகிரி காந்தல் பகுதியைச் சேர்ந்த கெளதம், டென்னிஸ் இவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள். கடந்த நான்கு நாட்களாக கூலி வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் இரு வீட்டாரும் ஊட்டி G1 காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை ஊட்டி படகு இல்லத்தில் இரண்டு சடலங்கள் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில், காணாமல் போன நண்பர்கள் இவர்கள்தான் என உறவினர்கள் அடையாளம் காட்டினர். இவர்கள் தற்கொலைக்கு காரணம் நீதிமன்றத்தில் அவர்கள் மேல் அடிதடி வழக்கு இருப்பதால், அதற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். நண்பர்கள் இருவரும் பெல்ட்டால் கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.