நீலகிரி: நாளுக்குநாள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வரும் ஊட்டி நீராவி மலை ரயிலை, 3 லட்சத்து 60ஆயிரத்து 675 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த 16 சுற்றுலா பயணிகள் இன்று (ஜன.28) மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பயணித்து மகிழ்ந்தனர்.
நீலகிரி மலை ரயில், இழப்பை சந்தித்து வந்ததால், இதனை லாபகரமாக இயக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு முடிவு செய்தது, அதன்படி தனியார் அமைப்புகள், தனி நபர்கள் வாடகைக்கு எடுத்து பயணம் செய்ய தென்னக ரயில்வே முடிவு செய்தது. இதனைத்தாெடர்ந்து, பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவ்வப்போது, மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து, ரஷியா, அர்ஜென்டினா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த காலங்களில் மலைரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்தனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் மூலம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 16 பேர் மலைரயில் பயணத்தை மேற் கொண்டனர். இதன் மூலம் நீலகிரி நீராவி என்ஜினின் பெருமை உலக அளவில் தெரிய வரும் என்பதாலும், எதிர் வரும் காலங்களில் உள்ளூர் மற்றும் வெளி நாட்டினர் தனியாக இந்த ரயிலை வாடகைக்கு எடுத்து ரயில்பயணம் மேற் காெள்ளவதன் மூலம்,இழப்பு ஏற்படாமல் மலை ரயில் இயக்கம் தொடர்ந்து இருக்கும் என்று ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
'மலைகளின் அரசி' எனப்படும் ஊட்டியில், நீராவி மலை ரயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் பயணம் செய்வதே அங்கு சுற்றுலாவிற்கு செல்லுவோரின் முதல் ஆசையாக இருக்கும். அந்தவகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் (UNESCO) பெற்ற மலை ரயில் தினமும் இயக்கி வருகிறது. மேலும், கடந்த 2022 நவம்பர் 22ஆம் தேதி, ரூ.9.30 கோடியில் புதிய டீசல் நீராவி என்ஜின் மலை ரயில் இயங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தினமும் 15 லிட்டர் பால் குடிக்கும் எருமை.. விலை எவ்வளவு தெரியுமா?