நீலகிரி மாவட்டம் உதகையில் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தற்போது களைக்கட்டி உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக உதகை அரசு தாவரவயில் பூங்காவில் 123ஆவது மலர் கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியைக் காண சுமார் ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கார்னேசியன் மலர்களைக் கொண்டு 22 அடி உயரத்தில் பிரமாண்ட நாடாளுமன்றம் வடிவமைக்கபட்டுள்ளது. 50 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு 123ஆவது மலர் கண்காட்சி என்ற வடிவம் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.
மேலும் மலர் மாடங்களில் 30 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. மூன்றாயிரம் ஆர்கிட் மலர்களைக் கொண்டு தொட்டியிலிருந்து பல வண்ண மலர்கள் கொட்டுவது போன்ற மலர் அருவியும், அதன் கீழ் ஐந்தாயிரம் மலர் தொட்டிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆயிரக்கணக்கான சுற்றலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துவருகின்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.