தஞ்சாவூர்: திருவையாறு அடுத்த மணக்கரம்பை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி செல்வி, பாலகிருஷ்ணனிடம் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தைப் பிரிந்து தஞ்சையில் தனியாக வசித்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் அபிராமி(23), பியூட்டிசியனாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1 வாரத்திற்கு முன்பு சென்னைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் (ஜூலை 19) வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டில் காலை நேரத்தில் அபிராமியின் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். தற்போது இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருவையாற்றை அடுத்த மணத்திடல் பகுதியை சேர்ந்த முகேஷ்(23) என்ற வாலிபர், அபிராமியை தான் கொலை செய்து விட்டதாக கூறி மணக்கரம்பை கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரிடம் சரணடைந்துள்ளார். இதனையடுத்து சரணடந்த முகேஷை நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நடுக்காவேரி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த வாக்கு மூலத்தில், "அபிராமியும் முகேஷும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே முகேஷுக்கு அபிராமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபிராமி சென்னை சென்றுள்ளார்.
பின்னர் சென்னையில் இருந்து திரும்பி கடந்த 19 ஆம் தேதி தஞ்சைக்கு வந்துள்ளார். அப்போது அபிராமியின் தாயார் செல்வி வேலைக்கு சென்று விட்டதால் அபிராமி மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட முகேஷ் அபிராமியின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அப்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அபிராமி மறுத்துவிட்டதால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்து கத்தியை எடுத்து அபிராமியை குத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த சம்பவத்தை முகேஷின் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது முகேஷின் தந்தையும், அவரது நண்பருமான மகேந்திரன் என்பவரும் புறப்பட்டு மணக்கரம்பை வந்துள்ளனர். அதன்பின் முகேஷ் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை கழற்றி தனது தந்தையிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அந்த சட்டையை எடுத்துக் கொண்டு சென்று ஆற்றில் வீசிவிட்டனர்" என்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தற்போது இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அபிராமியை கொலை செய்த காதலன் முகேஷையும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த முகேஷின் தந்தை ராஜேந்திரன் மற்றும் மகேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், காதலனே சந்தேகத்தில் இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.