தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 90 விழுக்காடு அறுவடை முடிவடைந்துள்ள நிலையில், பிற்பட்ட குறுவை அறுவடை பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தஞ்சையை அடுத்த கொள்ளங்கரை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஐந்தாயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல்மணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை கொட்டுவதற்குக்கூட இடம் இல்லாததால், சாலைகளில் கொட்டிவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதால், நெல்மணிகள் நனைந்து பல மூட்டைகள் முளைத்துவிட்டன என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொள்முதல் இல்லாததால், பல பகுதிகளில் அறுவடைப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், முற்றிய பயிர்கள் வயல் வெளியிலேயே சாய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், உடனடியாக, கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு வழங்கும் அரிசி தரமற்றதா?