தஞ்சாவூர்: திருவையாறு அருகே முகமது பந்தர் ரஹீம் நகரை சேர்ந்தவர் முகமது காசிம், இவர் முகமது பந்தர் ஜமாத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆம் தேதி அன்று தனியார் கொரியர் நிறுவனத்திடமிருந்து தொலைபேசி மூலம் முகமது காசிம் என்ற பெயரில் பார்சல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 3 ஆம் தேதி மழை பெய்து வந்ததால், அவரால் பார்சல் வாங்க முடியவில்லை. பின்னர் மாலை சுமார் 7 மணி அளவில் கொரியர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் பார்சலை கொண்டு வந்து அவரிடம் கொடுத்து சென்றுள்ளனர். அப்போது அந்த பார்சலை வாங்கி பிரிக்காமல், மறுநாள் 4 ஆம் தேதி தனது மகனிடம் பார்சலை பிரித்துப் பார்க்க சொல்லி இருக்கிறார் முகமது காசிம்.
அந்த பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் மண்டை ஓடு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிலிருந்து துர்நாற்றமும் வீசி உள்ளது. இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் அளித்த அந்த தகவலின்பேரில், திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் பார்சலில் வந்த மண்டை ஓட்டை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பார்சலில் அனுப்புநர் முகவரியில் நவ்மன்பாய் கான் என பாதி ஆங்கிலம், தமிழ் என கலந்து எழுதப்பட்டிருந்துள்ளது. மேலும் பார்சலில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த அப்துல்லா, முகமது முபின் ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் அவர்கள் இருவரையும் விசாரித்த போது தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் இருந்து மண்டை ஓட்டை எடுத்து மாந்திரீகம் செய்து அதை திருவையாறு சேர்ந்த ஜமாத் தலைவருக்கும் மற்றும் தஞ்சை சேர்ந்த இருவருக்கும் மொத்தம் மூன்று பேருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் தெரியவந்தது.
மேலும் மற்ற இருவரும் பார்சலை பிரிக்காத நிலையில், அவற்றைப் பிரிக்க வேண்டாம் எனவும் காவல்துறையினர் அவர்களுக்கு தெரிவித்துள்ளனர். முகமது காசிம் தொடர்ந்து ஜமாத் தலைவராக இருந்து வந்துள்ளதால் அவரைப் பிடிக்காத காரணத்தினால் மண்டை ஓடு அனுப்பியதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மாநில அளவிலான கபடி போட்டி: மேடையில் அமைச்சர் த.மோ.அன்பரசனை கலாய்த்த உதயநிதி!