தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலைக்கு வந்த கேரளா நபர்கள் பயன்படுத்திய நிசான் மைக்ரா காரில், முன் பக்கத்தில் கேரளா பதிவெண்ணும் பின் பக்கத்தில் தமிழ்நாடு பதிவெண்ணும் கொண்டு இருந்ததால், அதிர்ச்சியடைந்த சுவாமிமலை போலீசார் சந்தேகத்தின் பேரில் காரை பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் வந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை, தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும் இங்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்,
இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து சுவாமிமலைக்கு தரிசனம் செய்ய வந்த நபர்கள் பயன்படுத்திய நிசான் மைக்ரா காரில் முன்பக்கத்தில் KL 63 D 5431 என்ற பதிவெண்ணும் பின்பக்கத்தில் TN 11 W 6430 என்ற பதிவெண்ணும் கொண்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த, சுவாமிமலை போலீசார் உடனடியாக இந்த காரை பறிமுதல் செய்ததுடன் கேரளாவில் இருந்து காரில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் எதுவும் தொடர்பு உள்ளதா? எதற்காக தமிழகம் வந்தார்கள்? இங்கு யார் யாரை சந்தித்தார்கள்? சதி வேலையில் எதுவும் ஈடுபட இங்கு வந்தார்களா? கேரளாவில் இருந்து காரில் என்ன கொண்டு வந்தார்கள்? என்பது குறித்தும் பல கோணங்களில் அவர்கள் அனைவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இரண்டு நம்பர் பிளேட் ஒரே காருக்கு எப்படி கிடைத்தது என பார்ப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் கும்பகோணம் மற்றும் சுவாமிமலை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.