தஞ்சாவூர்: தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் 'பொற்காலம்' என்றால் எல்லோரின் நினைவிற்கும் வருவது சோழச் சாம்ராஜ்யத்தின் பேரரசர் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருண்மொழி வர்மன் ஆட்சிதான்.
பொற்கால ஆட்சி நடத்தியவர் என்று போற்றத்தக்க வகையில் இப்பேரரசர் கி.பி. 985ஆம் ஆண்டுமுதல் கி.பி. 1014 வரையில் இருபத்து ஒன்பது ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியது, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிலும் மிக முக்கிய வரலாறாகத் திகழ்ந்துவருகிறது.
1036ஆவது சதய விழா
ஒரு தலைவன் தன் நாட்டையும் தன் நாட்டு மக்களையும் எவ்வாறு வழிநடத்திட வேண்டும் என்பதற்குத் தலைசிறந்த முன் உதாரணமாக விளங்குகிறார் ராஜராஜ சோழன். இவரது ஆட்சியில் ராணுவம், நுண்கலை, கட்டடக் கலை, சமயம், போர்க்கலை, இலக்கியம் ஆகியவை தலைசிறந்து இருந்தன.
உலகப் புகழ்பெற்ற, ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் பிறந்த நாள், அரியணை ஏறிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு 1036ஆவது சதய விழா இன்று (நவம்பர் 13) காலை மங்கள இசையுடன் தொடங்கியது.
இராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை
அதனைத் தொடர்ந்து, திருவீதி உலா நடைபெற்றது. கரோனா காரணமாகக் கோயில் பிரகாரத்திற்குள் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து, பெருவுடையாருக்கு 48 வகையான திருமுழுக்கு நடைபெறுகிறது.
இதில் இருபத்து ஏழாவது ஸ்ரீலஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானதேசிக சுவாமிகள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஆண்டுதோறும் இரண்டு நாள் விழாவாகக் கொண்டாடப்படும் சதய விழா, இந்த ஆண்டு கரோனா காரணமாக ஒரு நாள் மட்டுமே நடைபெறுகிறது. மேலும், சதய விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - தமிழ்நாடு அரசு ஆணை