தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மத்திய மாவட்ட மாநகர திமுக சார்பில், காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளை காப்பாற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய எம்பி டி.ஆர்.பாலு, "நாடாளுமன்றத்தில் Joint Parliment Committee கேட்டோம். பாஜக இந்த கமிட்டியை அமைக்கவில்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 420 மலை என்று பெயர் வைத்துள்ளார்கள். என்னுடைய தகுதிக்கு நிறைய பேசக் கூடாது. தற்போது திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர்.
அவர்கள் கூட அண்ணாமலையைப் பற்றி பேசக் கூடாது. Is nothing but a fool hardy no wise (முட்டாளைத் தவிர வேறொன்றுமில்லை என ஆங்கிலத்தில் கூறினார்). மேலும், என் மீது சுமத்தப்பட்ட 10 ஆயிரம் கோடி புகார் குறித்து நீதிமன்றத்துக்குச் சென்று இருக்க வேண்டும். நாங்கள் நோட்டீஸ் வழங்கி 12 நாட்கள் ஆகியும் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை. என் மீது கிரிமினல் வழக்கு தொடரலாம்.
ஆகவே, என் மீது கிரிமினல் வழக்கு தொடராத காரணத்தினால் நீதிமன்றத்தில் சந்திப்பதாக முடிவு செய்து, வரும் 8ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு போட உள்ளேன். பின்னர், 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கு அவரின் செயல்பாடுகளைப் பொறுத்து வழக்கு போட உள்ளேன்” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏ நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "இதெல்லாம் ஒரு சாதனையா..? வேதனையா இருக்கு" - திமுகவை விளாசிய எஸ்.பி.வேலுமணி!