தஞ்சாவூர்: காவிரி ஆணையத்தின் உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தடை கோரி உள்ள நிலையில், அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதை, தமிழகத்தில் உள்ள காவிரி சமவெளி மாவட்ட விவசாயிகள் பெருமை கொள்வதுடன், மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் பேசும்போது, "காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உள்ளதை, தமிழகத்தில் உள்ள காவிரி சமவெளி மாவட்ட விவசாயிகள் பெருமை கொள்வதுடன், அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
காவிரி நதி நீர் வழங்காமல், காவிரி சமவெளி மாவட்ட விவசாயிகளை வஞ்சித்து, இங்கு பேரிடர் ஏற்படும் வகையில் பெரும் பொருளாதார இழப்பீட்டினை ஏற்படுத்திய கர்நாடக அரசு, உரிய இழப்பீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், "உரிய காவிரி நீர் வழங்கப்படாத இம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உரிய இழப்பீட்டினை விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழக அரசையும், மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் கேட்டுக் கொள்கின்றோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: "இந்தியாவின் வரலாறு காவிரியிலிருந்து எழுதப்படக் கூடியது" - அமைச்சர் தங்கம் தென்னரசு