தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 03.01.2022 முதல் இருந்து வருகிறார். இவர் அதற்கு முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் கட்டளைத் தம்பிரானாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சுதந்திரச் செங்கோல் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதற்கான விளக்கம் கேட்டும், ஆதீனத்தில் குற்றப் பின்னணி உடைய நபர்களை தங்க வைத்திருப்பதாகவும், இதன் காரணமாக ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆதீனகர்த்தர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு, திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்டு உள்ள அக்கடிதத்தில், ‘சூரியனார் கோயில் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகள், கடந்த 03.01.2022 அன்று பரிபூரணம் அடைந்ததால், திருவாவடுதுறை ஆதீன வழக்கப்படி, ஆதீனத்தில் தம்பிரான் சுவாமிகளாக இருந்து வந்த ஸ்ரீமத் அம்பலவானத் தம்பிரானை, 28வது குருமகா சந்நிதானமாக திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் ஆதீன மரபுகளின்படி, திருவான தீட்சை, ஆச்சாரிய அபிஷேகம் செய்யப் பெற்று, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் என்ற திருநாமம் சூட்டப்பட்டு, பொறுப்பேற்க செய்தருளினார்கள்.
அதன்படி, தாங்கள் சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானமாக பொறுப்பேற்ற பிறகு, சூரியனார் கோயில் ஆதீன மரபுகளையும், திருவாவடுதுறை ஆதீன கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் சிதைக்கும் வகையிலும், சைவ சமயத்திற்கு எதிராகவும், திருவாவடுதுறை ஆதீனத்திற்கும், பாரத தேசத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சுதந்திரச் 'செங்கோலினைப்’ பற்றி தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது தொடர்பாகவும், தங்களைப் பற்றிய தவறான தகவலும், முறைகேடான செய்திகளும் காணொலி வாயிலாகவும், ஒளிநாடாக்கள் வாயிலாகவும் வந்த வண்ணம் உள்ளன.
இதன் மூலம் தனிமனித ஒழுக்க விதிமுறைகள் மீறப்பட்டது தெரிய வருகிறது. ஆதலால், ஒழுங்கீனச் செயல்கள் ஆதீன விதிமுறைகளுக்கு எதிராகவும், மரபு சம்பிரதாயங்களுக்கு எதிராகவும் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மிக மிக மோசமான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு சூரியனர் கோயில் ஆதீனமாக பொறுப்பு வழங்கிய தங்களது குருவான திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்துக்கு நன்றியுணர்வோடு இருக்கும்படியும், ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து பணிகளைத் தொடர அறிவுறுத்தியும், மேற்படி புகார்கள் குறித்து தங்களிடம் பலமுறை விளக்கங்கள் கேட்டும், இதுவரை எந்தவொரு விளக்கமும் தராமலும், தங்களது கீழ்த்தரமான நடவடிக்கைகளை சரி செய்து கொள்ளாமல் இருந்து வருவதால், சூரியனார்கோயில் ஆதீன பொறுப்பில் தொடர தகுதியற்ற நபராக இருந்து வருகிறீர்கள்.
மேலும், ஆதீனத்தில் குற்றப்பின்னணி உடைய நபர்களை தங்க வைத்திருப்பது தெரிய வருகிறது. மேற்கண்ட காரணங்களுக்காக உங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆதீனகர்த்தர் பதவியிலிருந்து ஏன் நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை இந்த அறிவிப்பு பெற்ற 15 தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தவறும் பட்சம், சமாதானம் கூற எதுமில்லை எனக்கருதி, ஆதீன விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கடிதத்தின் நகல் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விநாயகர் சிலை விற்பனை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி.. தலைமை நீதிபதி கூறியது என்ன?