தஞ்சாவூர்: கும்பகோணம், மலையப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஜி இளங்கோவன். கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். நெல் ஜெயராமன் மீது கொண்ட ஈடுபாட்டால் இயற்றை விவசாயத்திற்கு மாறி 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
இந்தநிலையில், இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வேளாண் சாகுபடி நிலத்தில் திருவள்ளுவர் திருவுருவப்படம் தெரியும் வகையில் 110 நாட்கள் வயதுடைய பாரம்பரிய நெல் ரகமான கருப்பு நிறம் கொண்ட நேபாள நாட்டு சின்னார் ரகமும், மைசூர் மல்லிகை ரகத்தையும் இணைத்து குறுவை சாகுபடியில் நடவு செய்துள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், "உலக பொதுமறையாம் திருக்குறளை உலகுக்கு தந்த திருவள்ளுவர் உழவையும், உழவர்களை பெருமைபடுத்திடும் வகையில் குறள்கள் எழுதியுள்ளார். எனவே அவரை போற்றி பெருமைப்படுத்திடும் வகையிலும், இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வள்ளுவர் உருவம் வெளிப்படும் வகையில் நெல் பயிரிட்டுள்ளேன்" என்றார்.
தற்போது 60 நாட்களை கடந்துள்ள இப்பயிர்கள் கதிர் வரத்தொடங்கியுள்ளது. இன்னும் 50 நாட்களில் பயிர்கள் அறுவடைக்கு வந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பைந்தமிழ் எழுத்துக்களில் திருவள்ளுவர்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!