மேட்டூரில் குறுவை சாகுபடிக்காக கடந்த 12ஆம் தேதி தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அந்த நீர் 15ஆம் தேதி இரவு கல்லணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும் நீர் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு கல்லணையிலிருந்து திறக்கப்படவுள்ளதால், திருவையாறு காவிரி ஆற்றினைத் தூய்மை செய்யும் பணியில், திருவையாறு பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து திருவையாறு பாரதி இயக்கத்தின், 'பொங்கி வா காவிரி' அமைப்பினர் மேற்கொண்டனர்.
இதில், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், தஞ்சாவூர் நியூடவுன் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் பர்சனாலிடி பிளஸ் ஜே.சி.ஐ சங்கம், திருவையாறு காந்தி பாரதி இளைஞர் மன்றம், வைத்தியநாதன்பேட்டை ஜீவா பாரதி இளைஞர் மன்றம், தெருவாசிகள் நலச்சங்கம் ஆகியோர் ஆர்வமாக பங்கேற்றனர். அப்போது, அக்குழுவினர் அப்பகுதியிலிருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு காவிரியைத் தூய்மை செய்வதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இப்பணியில், திருவையாறு பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, ஆய்வாளர் செந்தில், பிளஸ் ஜேசிஐ சங்கத் தலைவர் ஜேசி மகிழினி உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர்.