கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்துள்ளன.
இதையடுத்து, கடந்த 4 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கவும் பொதுமக்கள் வெளியில் நடமாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் ஏராளமான வாகனங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க வந்தனர்.
இதையடுத்து காவல் துறையினர், பொது இடங்களில் மக்கள் தேவையின்றி ஒரே நேரத்தில் கூட வேண்டாம் எனவும், அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு மூன்று விதமான அட்டைகளையும் வழங்கினர்.
இந்த அட்டைகளில் குறிப்பிட்டுள்ள நாள்களில் மட்டுமே மக்கள் பொருள்களை வாங்க அனுமதிக்க வேண்டும் எனவும், இதனை மீறி செயல்படும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
மேலும், காவல் ஆய்வாளர் ஒருவர் கரோனா அச்சுறுத்தல் குறித்த எவ்வித தயக்கமுமின்றி ஒன்றாக திரண்ட மக்களிடம் தொற்று பரவுவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும், குடும்பத்தினரிடம் நிகழும் மாற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். தங்களது குடும்பங்களுக்காகவேனும் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 37 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!