தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் வண்ணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சிங்கப்பூரில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன்கள் வண்ணக்குடியில் வசித்து வருகின்றனர். ராமலிங்கம் வண்ணக்குடியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
அந்த வீட்டில் நரசிங்கம்பேட்டை அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த பரசுராமன் (32) என்பவர், அங்கேயே தங்கியபடி கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை புதிய வீட்டின் மாடிப்படி அருகே, பரசுராமன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இதனைக்கண்ட ராமலிங்கத்தின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சாதிக் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே உயிரிழந்த பரசுராமனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொப்புள் கொடி காயும் முன் பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய கொடூரம்