தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்தி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் ஐஸ்வர்யா (20), திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் பல்லடத்திற்குச் சென்று, அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். சொந்த ஊருக்கு வந்த அன்று இரவு, ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, உறவினர்கள் அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று, போலீசாருக்குத் தெரியாமல் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் நவீன் (19), வாட்டாத்தி கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “வேறு சமூகத்தைச் சேர்ந்த நானும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் உறவினர்கள், ஐஸ்வர்யாவை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர் இறந்து விட்டதாக தெரிய வருகிறது” என்று புகார் அளித்துள்ளார். இது குறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்த தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன், தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்பி ஆஷிஷ் ராவத் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததால், இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததால் இளம்பென் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.