தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில், விவசாயி ரவிச்சந்திரன் உயிரிழந்த நிலையில், குவைத் நாட்டில் தஞ்சாவூர் பெண் மகாலட்சுமியை, இந்தியாவிற்கு திரும்பி அனுப்ப உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.ட் தனது கணவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காகவும் அவரது முகத்தை இறுதியாக பார்வேணடும் எனவும் அவரது மனைவி கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, குவைத் நாட்டில் சிக்கித்தவிக்கும் ரவிச்சந்திரனின் மனைவி மகாலட்சுமி வந்தப் பிறகுதான், உடலை அடக்கம் செய்வோம் எனவும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நடவடிக்கை எடுக்க உடனடியாக வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
கும்பகோணம் வலங்கைமான் சாலையில் உள்ள திப்பிராஜபுரம் கிராமம் மேட்டுத்தெருவில் வசிப்பவர்கள் விவசாயி ரவிச்சந்திரன் (52) மகாலட்சுமி (45) தம்பதியினர். இவர்களுக்கு ரம்யா, சூர்யா, ரூபியா, சாரதி மற்றும் தனலட்சுமி என ஐந்து மகள்கள் உள்ளனர். இவர்களில், ரம்யா மற்றும் சூர்யா ஆகிய இரு மகள்களுக்கு மட்டும் திருமணமாகியுள்ளது. 3 மகளுக்கு திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால், விவசாயத்தில் போதுமான அளவிற்கு வருமானம் சமீப காலமாக கிடைக்காத நிலையில் குடும்ப தேவைக்காக, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி, வீட்டு பணிப்பெண் வேலைக்காக குவைத் நாட்டிற்கு சென்றார்.
அவர், குவைத் சென்றதில் இருந்தே மனதளவில் பாதிக்கப்பட்ட கணவர் ரவிச்சந்திரன், அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவரின் மறைவு குறித்து குவைத்தில் வேலை செய்துவரும் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வீட்டின் உரிமையாளர் மறுத்து விட்டார். காரணம், இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தின் படி, தற்போது வரை ஒன்றரை ஆண்டுதான் ஆகியுள்ளதாகவும் ஆகவே, இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப முடியாது என மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி, இதுகுறித்து மத்திய அரசும், தமிழக அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இந்தியாவில் உயிரிழந்த தனது கணவரின் முகத்தை கடைசி முறையாக நேரில் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ பதிவு ஒன்றினை அனுப்பியுள்ளார், இது காண்போர் அனைவரையும் கண் கலங்க செய்துள்ளது.
இதனால், செய்வதறியாமல் குவைத் நாட்டில் சிக்கித் தவிக்கும் மகாலட்சுமி, உயிரிழந்த தனது கணவரின் முகத்தை கடைசியாக பார்ப்பதற்கு மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காண்போரை கண்கலங்க வைக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து, ரவிச்சந்திரன் மகாலட்சுமி குடும்பத்தினர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்வை நேரில் சந்தித்து குவைத் நாட்டில் உள்ள மகாலட்சுமியை இந்தியா திரும்ப உதவிட வேண்டும் என்றும், அதுவரை உயிரிழந்த ரவிச்சந்திரனின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதனிடையே ரவிச்சந்திரன் - மகாலட்சுமி குடும்பத்தினர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பை நேரில் சந்தித்து குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் தங்களது தாயாரை மீட்டு இந்தியா கொண்டுவர அரசு உதவி செய்ய வேண்டும் எனவும்; அதுவரையில் ரவிச்சந்திரனின் உடலை அடக்கம் செய்யமாட்டோம் எனவும் கூறி இது குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கணவன் உயிரிழக்கும் போதுதான், அருகில் இருக்க முடியவில்லை; அவர் உயிரிழந்தப் பிறகு அவரது முகத்தைக் கூட நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என்ற தவிப்பில் மகாலட்சுமி பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் குவைத் நாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பது, கனத்தை இதயம் கொண்டவரையும் கண்கலங்க வைக்கிறது.
ஆகவே, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைத்து, முறையாக மகாலட்சுமியை குவைத் நாட்டில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரம் கிராமம் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முன் விரோதம் காரணமாக கூலி தொழிலாளி அடித்து கொலை.. தந்தை மகன் கைது!