தஞ்சாவூர்: நாகப்பட்டினம் - கூடலூர் - மைசூர் NH 67 எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள உயர் மட்ட மேம்பாலம் ஒன்று கடந்த 2008ஆம் ஆண்டு கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் தஞ்சாவூர், திருச்சி செல்லும் சர்வீஸ் ரோடு பகுதியில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை சுமார் 10 அடி உயரம், 5 மீட்டர் நீளம் அளவிற்கு சரிந்து விழுந்து ஓட்டை விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பாலத்தின் மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து பாதை மாற்றி விடப்பட்டது. இதையடுத்து இடிந்து விழுந்த பகுதியில் உள்ள இடிபாடுகள் மற்றும் மண் அகற்றப்பட்டு, அப்பகுதியில் சீரமைப்புப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இருப்பினும், பாலம் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் அடுத்தடுத்து பக்கவாட்டுச் சுவர் மண் சரிவு ஏற்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன. முறையாகப் பாலம் பராமரிப்பு இல்லாததால், இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. அதனால் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும்; பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், அந்த பாலத்தினை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து NIT தேசிய தொழில்நுட்ப நிறுவனப் பேராசிரியர்கள் பாஸ்கரன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பாலத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தான் தீர்வு காண முடியும் எனப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த மேம்பாலத்தின் அடுத்தடுத்த பகுதியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை சோதனை செய்ய விரிசல் ஏற்பட்டுள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்களுக்கு இடையே ஜூன் 21 அன்று பேக்கிங் டேப் ஒட்டி வைத்தனர். ஆனால், அதைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர் என தெரிவித்தனர்.
மேலும் செங்கிப்பட்டி பகுதியில் அரசு கல்லூரி மற்றும் அரசுப் பள்ளிகள் உள்ளன. இந்த பாலம் அருகில் தான் மாணவர் வந்து செல்லும் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் மாணவர்கள் பேருந்துகளில் ஏறிச் செல்வார்கள். ஆகையால், எந்த ஒரு அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன் உடனடியாக பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் பாலத்தின் சுவற்றில் பேக்கிங் டேப் ஒட்டப்பட்டுள்ளதால் பலர் நகைத்தவாறு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியும் வந்தனர்.