தஞ்சாவூர்: பிரதமர் நரேந்திர மோடியின் “அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின்” கீழ் 508 ரயில் நிலையங்களை மறு வடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதேபோல், தஞ்சாவூர் ரயில் நிலையம் 23 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான விழா தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் திமுக எம்பிக்கள் பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி மேயர் ராமநாதன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், எம்பி கல்யாணசுந்தரம் பேசிய போது, ‘ஒன்றிய அரசு என பேச்சை தொடங்கினார், அப்போது பாஜக தொண்டர்கள் மத்திய அரசு என கூற வேண்டும் என தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அவர் சிறிது நேரம் பேசிவிட்டு அமர்ந்தார். பின்னர், எம்பி பழனிமாணிக்கம் பேசும்போது, பாஜகவினர் கோஷமிட்டு கொண்டே இருந்தனர். இதனையடுத்து பேசிய அவர், முருகானந்தம் சவுண்ட் விடாதீர்கள் எனவும், உட்காருங்க, அந்தந்த கட்சியில் இருக்கிற நீங்க அந்தந்த கட்சியில் வளரணும் நினைக்கிறவன் நான் என்றும், மேலும், 1999ல் உங்கள் கட்சியை தூக்கி நிறுத்தியதில் நானும் ஒருவன் என்றும், இது போன்ற கூட்டம் எவ்வளவு நேரத்தில் சேர்க்க முடியும்? பத்து நிமிடம் போதுமா, கூட்டம் கொண்டு வரவா? எனக் கூறினார்.
மேலும், தஞ்சாவூர் அரசியல் வேறு என்றும் நாட்டின் முதல்வரும், பிரதமரும் யாருக்கும் சொந்தமானவர்கள் கிடையாது எனவும், ஒன்றிய அரசு என்று ஏன் கூறக்கூடாது? நீங்கள் முதலமைச்சரை சொல்கிறீர்களா, மத்திய அரசு 9 ஆண்டுகளில் என்ன செய்துள்ளது? என்று கேள்வி எழுப்பிய போது, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷமிட்டு வெளியில் சென்றனர். அப்போது திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த செய்தி அறிந்ததும் திமுக தொண்டர்கள் கோஷமிட்டு கொண்டு விழா நடைபெறும் இடத்திற்கு வந்து திமுக தலைவர் பெயரை சொல்லி கோஷமிட்டனர்.
பின்னர், விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்பி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து பிரதமர் காணொலி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பின் தஞ்சையில் இந்தத் திட்டத்தினை எம்பி பழனிமாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தஞ்சை நாடாளுமன்ற உறுப்ப்பினர் கூறுகையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இராமேஸ்வரத்திற்கு தஞ்சை வழியாக போட் மெயில் (boat mail) ரயில் இரவு நேரத்தில் வருகிறது. அதன் 150வது வருடத்தை முன்னிட்டு, பகல் நேரத்தில் ஒரு புதிய ரயில் இயக்க ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம் எனவும், தஞ்சாவூர்-தாம்பரம் ரயில் பாதையில் கம்பன் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பாஜக மாநிலச் செயலாளர் முருகானந்தம் கூறுகையில், “தங்களுக்கு இந்த விழாவில் முன் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், அவர் மத்திய அரசை தவறுதலாக பேசியதால் ரயில்வே துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்புமாறு கூறினார்”.
இதையும் படிங்க:வைக்கோல் குடோனியில் பயங்கர தீ விபத்து; கரும்புகை மண்டலமாக காட்சியளித்த குடியிருப்புகள்!