தஞ்சாவூர்: கரந்தை பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன், இவர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.1) தனது வீட்டில் இருந்து 5 பவுன் கை காப்பு ஒன்றை அடகு வைப்பதற்காக எடுத்து வந்துள்ளார்.
அதனை தனது பேன்ட் பையில் வைத்திருந்தார். பின்னர் ஹோட்டலுக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்புவதற்காக பையை பார்த்தபோது நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாமரைச்செல்வன் பல இடங்களில் தேடியும் தவறவிட்ட தங்க நகை கிடைக்கவில்லை இதனால் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இதற்கிடையில் தஞ்சை தெற்கலங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் வேலை பார்க்கும் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நவீன், அஜ்மல், ஜஸ்வின் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாப்பிடுவதற்காக பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு கீழே கிடந்த கைக்காப்பு நகையை கண்டெடுத்தனர். நகை கடையில் ஊழியர்கள் வேலை பார்ப்பதால் அது தங்க நகை என்று உறுதி செய்தனர்.
பின்னர் நகைக்கடை ஊழியர்கள் கண்டெடுத்த நகையை தஞ்சை மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தஞ்சையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து யாராவது நகையை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனரா என விசாரணை நடத்தினார்.
ஆனால் யாரும் புகார் அளிக்கவில்லை மேலும் நகைக்கடை உரிமையாளர்களிடம் யாராவது நகையை காணவில்லை என வந்தால் தெரியப்படுத்துமாறும் கூறினார். அப்போது நகையை தொலைத்த தாமரைச்செல்வன் நேற்று (செப்.2) காலை தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது நகை காணாமல் போய்விட்டது.
காணாமல் போன நகையை கண்டுபிடித்து கொடுக்கும்படி பில்லுடன் புகார் அளிக்க வந்தார். அப்போது நகை கடை ஊழியர்கள் கொடுத்த நகை தாமரைச்செல்வனுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உரிய விசாரணை நடத்தி தஞ்சை நகர துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, மேற்கு காவல் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்கமல், சசிரேகா மற்றும் போலீசார் நகையை தொலைத்தவரிடம் நகைக்கடை ஊழியர்கள் முன்னிலையில் நகையை திருப்பி ஒப்படைத்தனர். நகையை பெற்றுக் கொண்ட தாமரைச்செல்வன் அதனை மீட்டு கண்டெடுத்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்,மேலும் நகைக்கடை ஊழியர்களுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டி! முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!