தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து வந்த 42 வயதான ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில், அவரைக் காண மருத்துவமனைக்குச் சென்ற அவரது குடும்பத்தினர் இருவர் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா கண்டறிதல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, கரோனா பாதித்தவர் வசித்துவந்த மையப் பகுதியான வடக்கு மாதப்பா தெருவில் பொதுமக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியைச் சுற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வருவாய்க் கோட்டாட்சியர் வீராச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், நகர்ப் பகுதி முழுவதும் பொதுமக்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பாலக்கரையில் மளிகை, இறைச்சி வாங்க வந்த பொதுமக்களைக் காவல் துறையினர் விரட்டி அடித்தனர். தொடர்ந்து பாலக்கரை, காந்தியடிகள் சாலை, பாணாதுறை உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்புத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினியை தெளித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:மின்சாரத் துறைக்கு 300 கோடி இழப்பு - அமைச்சர் தங்கமணி