தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தாமரங்கோட்டை மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (65). இவர் தனது மகள்கள் ராணி, பாப்பாத்தி ஆகியோருக்கு திருமணம் செய்துகொடுத்த பின், மகன் கண்ணன் என்கிற சூசைராஜ், மருமகள் அமுதா ஆகியோருடன் அதேப் பகுதியில் வசித்துவந்தார்.
இதனிடையே, துவரங்குறிச்சியிலிருந்து தாமரங்கோட்டை செல்லும் முக்கியச் சாலை அருகே உள்ள கொட்டகையில் செல்வராஜ் தினந்தோறும் படுத்து உறங்குவது வழக்கம். செல்வராஜின் உறவினர் ஒருவர் நேற்று காலை எப்போதும் போல அவரை சந்திக்க கொட்டகைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கே செல்வராஜ் கைகள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் சடலமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி, அதிராம்பட்டினம் ஆய்வாளர் ஜெயமோகன் விரைந்துவந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து செல்வராஜ் உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
மேலும் படிக்க: நண்பனைக் கொன்று வாட்ஸ்அப்பில் வாக்குமூலம்: குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு!