தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள ராஜாமடம் ஊராட்சியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையும் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொள்முதல் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் காலதாமதம் ஏற்படுவதாகவும்; இதனால் விவசாயிகள் 15 நாட்களுக்கும் மேல் காத்துக்கிடப்பதாகவும் இப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
இந்த தாமதத்தால் கொள்முதல் நிலையத்தில் இடவசதி இல்லாமல், அறுவடை செய்த வயல்களில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் இரவு - பகல் பாராது பாதுகாத்து வருகின்றனர். ஒருசிலர் வயல்களில் ஆடு, மாடுகள் தொந்தரவு இருப்பதால் அவற்றை விரட்டுவதற்காகவே ஆள் நியமனம் செய்துள்ளனர். ஆனைக்கொம்பன் நோய் தாக்கி மிகவும் குறைந்த அளவு விளைச்சலே எட்டிய நிலையில், அந்த நெல்லைக்கூட விற்பனை செய்ய முடியவில்லையே என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
இதையும் படிங்க: பொன்பேத்தி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!