தஞ்சாவூர்: ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தஞ்சாவூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (மார்ச்.14) நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கினார். இரண்டு சக்கர வாகனம் ஓட்டும்போது பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும்போது உயிரிழப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், போக்குவரத்து போலீசாரும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதித்து எச்சரிக்கை செய்தும் வருகின்றனர்.
இதனிடையே, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோயில் அருகில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: திருநெல்வேலி மேயர் மாற்றமா..? சென்னை நோக்கி படையெடுத்த திமுக கவுன்சிலர்கள்.. நெல்லை திமுகவில் நடப்பது என்ன?
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து தொடங்கிய பேரணி தஞ்சாவூரின் முக்கிய நகர வீதிகள் வழியாக சென்று மீண்டும் தொடங்கிய அதே இடத்திலேயே நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் போக்குவரத்து போலீசார் மற்றும் இரண்டு சக்கர வாகன பழுது பார்க்கும் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். இந்த பேரணியின்போது, விபத்தில்லா தஞ்சாவூரை உருவாக்க வேண்டும். எனவே, அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "தலைக்கவசம் அணியாமல் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சென்றால் அவர்களுக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தங்களது அடையாள அட்டையை காண்பித்தாலும் விதிமுறை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், தலைக்கவசம் அணியாமல் அரசு ஊழியர்கள் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள்" என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் பேசிய அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் விபத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன எனவும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்தும் வாகனத்தை ஓட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் இதுகுறித்து அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் காவல்துறை நகர துணை கண்காணிப்பாளர் ராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், மோட்டார் வாகன காவல் ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புக்கர் பரிசு பட்டியலில் 'பூக்குழி' தமிழுக்கு கிடைத்த பெருமை!