தஞ்சை புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள விமானப்படை தளம் 1940 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறிய விமானபடை தளமாக இயங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது அவசரமாக தரை இறங்க வேண்டிய விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த விமானப்படை தளம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கடந்த 1988ஆம் ஆண்டு சிறிய பயணிகள் விமானம் இங்கிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தன. பிறகு போதிய பயணிகள் இல்லாததால் இந்த சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சுகோய் போர் விமானங்கள் இயக்குவதற்குத் தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிவடைந்து கடந்த 2013 ஆம் ஆண்டு தஞ்சை விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே ஆண்டனி தரம் உயர்த்தி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து சுகோய் விமானங்கள் மூலம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. சுகோய் 30 ரக போர் விமானங்கள் தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதையடுத்து, தஞ்சை விமானப்படை தளம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்பட்டு பணிகள் படிப்படியாக நடைபெற்றது. விமானப்படையின் 222வது பிரிவு என்று குறிப்பிடப்பட்ட பிரிவு ஜனவரி 5ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலம் ஹசிரா என்ற இடத்தில் இயங்கிவந்தது. அதனை ஜனவரி 6ஆம் தேதி முதல் தஞ்சாவூர் தளத்திற்கு இடமாற்றம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பிரம்மோஸ் ஏவுகணையை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட ஐந்திலிருந்து ஆறு சுகோய் விமானங்கள் இன்று தஞ்சாவூர்முதல் விமானப் படை தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று அதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இதனை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து விமானப்படை வீரர்கள் பங்கேற்ற விமானங்கள் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதையும் படிங்க: