தமிழ்நாடு அரசு உத்தரவுக்கு இணங்க நேற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் உள்ள திருவையாறு, அல்சகுடி , திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், தோகூர் ஆகிய ஐந்து பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்க தயாரானபோது, அல்சகுடியில் உள்ள மக்கள் கடையை திறக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆர்ப்பாட்டம்கைவிடப்பட்டது.
அதுபோல பூதலூரில் மக்கள் உரிமை இயக்க அமைப்பினர், அப்பகுதி மக்களுடன் இணைந்து கடையை திறக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பூதலூர் தாசில்தார் சிவக்குமார், டாஸ்மாக் மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தி நீதிமன்றம் வழங்கியுள்ள விதிமுறைகளின்படி நடத்தப்படும் என்றும் அதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் உடனடியாக கடை மூடப்படும் என்று கூறியதின் பேரில் கூட்டம் கலைந்தது. மேலும், இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
மற்ற பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தோகூர் ஆகிய மூன்று இடங்களிலும் விற்பனை குறித்த நேரத்தில் திறக்கப்பட்டன. இந்த அனைத்து இடங்களையும் திருவையாறு பொறுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி மேற்பார்வையிட்டு அந்தந்த பகுதி ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, பொதுமக்களை குறிப்பிட்ட இடைவெளியுடன் நிற்க வைத்தனர். மது வாங்குபவர்கள் எதுவந்தாலும் எனக்கென்ன நான் மது வாங்கியே தீருவேன் என்று சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்வரிசையில் நின்று ஒரு பாட்டில் வாங்க ஒரு மணி நேரம் வரிசையில் நின்று வாங்கிச் சென்றதை காண முடிந்தது.
இதையும் படிங்க:டாஸ்மாக் திறப்பதற்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்!