தஞ்சாவூர்: கோயில்கள் புனரமைப்பு, குடமுழுக்கு ஆகியன செய்யக் கோரி அகில பாரத இந்து மகாசபா சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவையாறு தாலுகா அலுவலகத்தில் திருவையாறு வட்டத்திலுள்ள முக்கியக் கோயில்களின் திருப்பணி தொடங்க வேண்டும், குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கு வட்டாட்சியர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சித்திரவேல், இந்து அறநிலையத் துறை ஆய்வாளர், கண்டியூர், திருப்பந்துருத்தி, திருப்பழனம், திருக்காட்டுப்பள்ளி ஆகிய கோயில் செயல் அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், அகில பாரத இந்துமகா சபா ஆலய பாதுகாப்பு மாநிலத் தலைவர் ராம நிரஞ்சன், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் நடராஜன், ஆலய பாதுகாப்பு மாவட்ட செயலாளார்கள் அபிஷேக், கோபிநாத், தினேஷ், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் சார்பில் திருவையாறு வட்டத்திற்குள்பட்ட முக்கியக் கோயில்களில் திருப்பணி தொடங்க வேண்டும் எனவும், குடமுழுக்கு செய்ய வேண்டும் எனவும், பலமுறை மனு அளிக்கப்பட்டும் திருப்பணி இதுநாள் வரை தொடங்கவில்லை எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து இந்து அறநிலையத் துறை ஆய்வாளர் கூறுகையில், உயர்மட்ட குழு முடிவுக்குப் பின்னர் திருப்பணி, குடமுழுக்குத் தொடர்பான பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து திருவையாறு வட்டாட்சியர் பேசும்போது, மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்ற தகவலைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அகில பாரத இந்துமகா சபா சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.