தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், நாடகத்துறையில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் ஆகிய துறைகள் இணைந்து, 'கற்றல் கற்பித்தல் மற்றும் நிகழ்த்தல் நோக்கில் நாடகக்கல்வி' என்னும் தலைப்பிலான ஏழு நாள் இணைய வழி சான்றிதழ் வகுப்பினை இன்று முதல் (மே.11) தொடங்கி மே 17 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த இணைய வழி சான்றிதழ் வகுப்பில் மரபு நாடகங்கள், வீதி நாடகங்கள், குழந்தைகள் நாடகங்கள், கல்வி புலனத்தில் அரங்கம், தலித்திய நாடகம், பெண்ணிய நாடகம் குறித்து பேராசிரியர்கள் உரையாற்ற இருக்கின்றனர். இந்த இணைய வழி சான்றிதழ் கல்வி வகுப்பினை தமிழ் பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நாடகத்துறையின் யூடியூப் வாயிலாக நேரலையில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த இணைய வழி சான்றிதழ் கல்வி வகுப்பில் பள்ளி ஆசிரியர்கள் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் என, 7 ஆயிரத்து 300 பதிவுகள் வந்துள்ளதாகவும், இதில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.