காவிரி டெல்டா பாசனத்திற்கான நீராதாரமாக விளங்கும் மேட்டூர் அணையிலிருந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது கல்லணைக்கு வந்தடைந்ததையடுத்து, வரும் 16ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் விரைந்து கடைமடைப் பகுதிகளை அடைய தூர்வாரும் பணிகள் விரைந்து நடைபெற்றுவருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிட்ட வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இதுவரை 95 விழுக்காடு குடிமராமத்துப் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் தண்ணீர் வருவதற்குள் முடிக்கப்பட்டுவிடும். விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்காக, அவர்களுக்கு பயிர் கடன் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பயிர் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாகக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுவை தொகுப்பு திட்டத்திற்கு பதிலாக மும்முனை மின்சாரம், உர மானியம், நுண்ணுயிர் உரம், தழைச் சத்து ஆகியவை வழங்கப்பட்டுவருகின்றன“ என்றார்.