தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்துப் பாதுகாப்பான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதில் அவர்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. புதிய மின்சார சீர்திருத்த சட்ட வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் சரபங்க உபரி நீர் திட்டத்தை கைவிட வேண்டும், காவேரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் நோக்கத்தோடு, அதனை ஜல் சக்தித் துறைக் கட்டுப்பாட்டில் கொண்டு சென்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கியப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் திருவோணம் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். அதில் ஒன்றிய செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராமசாமி, நிர்வாக செயலர் சந்திரசேகர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். அசாம்பாவிதங்களைத் தவிர்க்க பாதுகாப்பிற்காக ஊரணிபுரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.