தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள் தோறும் 43 என்ற எண் கொண்ட அரசு பேருந்து தினசரி ஏழு முறை சென்று வந்துள்ளது. தற்போது காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் மட்டுமே அரசு பேருந்து இயக்கப்படுவதாக தெரிகிறது.
வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் இந்த அரசு பேருந்தில் தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இரு நேரங்களில் மட்டுமே அரசு பேருந்து இயக்கப்படுவதால், மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் தஞ்சை திருவையாறு புறவழிச்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சாலையில் பேருந்துகள் அணி வகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 'வாரிசு' படக்குழு மீது இந்திய விலங்கு நல வாரியம் பரபரப்பு புகார்