தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே உள்ள செம்பாளுர் கிராமத்தில், ஏற்கனவே இருந்த அரசு தொடக்கப் பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு சுமார் முப்பது லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது வரை அங்கு எந்த ஒரு கட்டுமான பணியும் நடைபெறவில்லை. இதனையடுத்து பள்ளி கட்டிடம் குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த கட்டிட நிதி மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனடியாக பள்ளி கட்டிட நிதியை மீண்டும் இந்த பள்ளிக்கு ஒதுக்கீடு செய்து புதிதாக பள்ளி கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (மே 30) ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பள்ளி மாணவர்கள் கல்வி எங்கள் உரிமை, கேட்கிறோம் கேட்கிறோம், பிறப்புரிமையை கேட்கிறோம் எனவும் என்ற கோஷத்துடன் பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு அந்த பகுதி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என கண்டன கோஷங்களை முழக்கமிட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கூறும்போது ”செம்பாளூர் கிராமத்தில் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தொடக்கப்பள்ளி பழுதடைந்து விட்டதால் புதிய பள்ளி கட்டிடம் அமைத்து தரச் சொல்லி மனு அளித்தனர்.
அதன் படி, புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு 30 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினார். கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் இருந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது இந்தப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது.
எனவே, இதில் அரசு தலையிட்டு உடனடியாக பள்ளி கட்டிடத்தை கட்டித் தர வேண்டும். பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால், ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. கிராமத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வெவ்வேறு பள்ளிக்கூடத்திற்கு செல்லுவதால் பள்ளி கட்டிடத்தை செம்பாளூர் கிராமத்தில் விரைவில் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: ரூ.6,500 கோடி அளவில் வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெருமிதம்!