தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்ட பின்னர், தரை கடை வசூழுக்கு அனுமதியளித்து 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதனையடுத்து நேற்று (ஜூன் 01) முதல் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் தரை கடை போடுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, ஒரு சதுர மீட்டருக்கு 30 ரூபாய், இதுவே தள்ளுவண்டியில் வணிகம் செய்வோருக்கு 5 அடி நீளம் 3 அடி அகலத்திற்கு 50 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களில் வணிகம் செய்தால் வண்டி ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 75 ரூபாய், திருவிழா கால கடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் என நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து இன்று (ஜூன் 02) தஞ்சை மாவட்ட ஏஐடியுசி சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் விற்பணையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏஐடியுசி தொழிற்சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் தில்லைவனம், “தெருவோர விற்பனையாளர்களை கடுமையாக பாதிக்கும் வகையில் 5 மடங்கு அதிக வாடகை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாடகை உயர்வை மாநகராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்து குறைத்திட முன் வரவேண்டும் இல்லையெனில் வரும் ஜூன் 6 ஆம் தேதி காலை கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக, நால்ரோடு மாநகராட்சி அலுவலகம் வரை சென்று அங்கு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்து மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கீழே கிடந்த நகை, பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான தந்தை - மகன்!