உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சாமானியர்களும் முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், அதற்கான தேவை உலகம் முழுவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் முகக் கவசங்கள் அணிவது 6 மாதம் முதல் ஒரு ஆண்டு காலம் வரை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மருதாநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் சண்முகா பிபிஇ இண்டஸ்ரீஸ் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக உலகத் தரத்தில், என்95 தரத்தில், மூன்று ரகங்களில் பாலி புரோப்பலின் மூலப்பொருளை கொண்டு, நாள்தோறும் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் எண்ணிக்கையிலான முகக் கவசங்களை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் வாயிலாக நேரடியாக 80 பேரும் மறைமுகமாக 120 பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இன்னும் மூன்று வாரங்களில் ஜெர்மன் நாட்டிலிருந்து மற்றொரு இயந்திரம் வந்த பின்னர் நாள்தோறும் இதன் தயாரிப்பு எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடையுள்ளது.
எனவே, விலக்கு அளித்த பின்னர் முகக் கவசங்களின் அவசியம் உலகம் முழுவதும் தேவைப்படுவதால், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகரன் கூறுகையில், தங்களது ஒரே நோக்கமும், லட்சியமும், சர்வதேச தரத்திலான முகக் கவசத்தினை குறைவான விலைக்கு வழங்குவதே நோக்கமாக உள்ளது என்றார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் ஆயிரத்தை தொட்ட கரோனா பாதிப்பு!