தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு மஞ்சுளா வல்லி சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கோயில். இது நாச்சியார்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள இந்தக் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள சீனிவாசப் பெருமாளை நூற்றுக்கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடி திருமங்கையாழ்வார் வழிபாடு செய்ததாக வைணவ பக்தி இலக்கியங்கள் மூலமாக நாம் அறியமுடிகிறது.
வேறெங்கும் காணாத வகையில் இத் திருத்தலத்தில் மட்டும் தனி சன்னதி கொண்ட கல் கருட பகவானுக்கு ஆறுகால பூஜைகளுடன் அனைத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாலயத்தில் பங்குனி மற்றும் மார்கழி மாதம் என ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாளில் கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், கருடனின் ஜென்மதினமான ஆடி சுவாதியை முன்னிட்டு சகஸ்ரநாம அர்ச்சனை கருட மூலமந்திரம் ஹோமம் புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு ஆராதனையும் இன்று (ஜூலை29) நடைபெற்றது.
உலகையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் முற்றிலும் நீங்க வேண்டி இந்த பூஜையின்போது சிறப்பு வழிபாடும் நடைபெற்றதாக பட்டாச்சாரியார்கள் கூறினார்கள்.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் இல்லாமல் கோவில் பட்டாச்சாரியார்கள், கோயில் பணியாளர்கள் நிர்வாகிகள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியோடு வழிபாடு நடத்தியதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.