தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி மாதா பேராலய கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சியானது வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது. உலகப்புகழ்பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்றாகவும், இந்தியாவில் பத்து பசிலிக்காவில் ஒன்றாகவும் பூண்டி திகழ்கிறது. தமிழ்நாட்டில் வேளாங்கண்ணிக்கு அடுத்ததாக கிறிஸ்தவர்கள் தரிசனம் செய்ய நினைக்கும் தேவாலயமாக உள்ளது, இந்த பூண்டி மாதா பேராலயம்.
இந்த பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு கரோனா தொற்று காரணமாக, கடந்த ஐந்து மாதமாக பேராலயம் மூடப்பட்டு இருந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி ஆலயத்தில் பங்குத் தந்தைகள் மட்டுமே பங்கேற்று கொடியேற்றத்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து நவ நாட்கள், பூஜைகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து, கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாடு அரசானது ஊரடங்குத் தளர்வை அறிவித்ததையடுத்து, பக்தர்களை தகுந்த இடைவெளியுடனும், கிருமி நாசினி தெளித்தும் பேராலயத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
இதுபோலவே வரும் 8ஆம் தேதி கன்னி மரியாள் பிறப்பு பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேர்பவனி உள்ளது. இதில் சிறிய அளவில் தேர் செய்யப்பட்டு, அதை அரசு விதித்துள்ள உத்தரவுக்கு ஏற்ப குறைந்த பக்தர்களுடன், தகுந்த இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்தபடி தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பேராலயத்தை மட்டும் சுற்றி வரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தை ராஜ், உதவி தந்தை அருள் சவுரி ராஜ், ஆன்மீகத் தந்தை அருளானந்தம், கருணைதாஸ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரச மரத்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கோவைவாசிகள்!