தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலமாக போற்றப்படும் நாக நாதசுவாமி நாக கன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் தனி சன்னதி கொண்டு ராகு பகவான் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
இங்கு ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கமாகும்.
இந்நிலையில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இன்று பகல் 2.16 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கிடையில் கரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். அதன்படி வழிபாட்டு தலங்கள் இன்று 1-ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.
அதன்படி கோயில்கள் திறக்கப்படுவதால், திருநாகேஸ்வரம் ராகு கோயிலும் பக்தர்களுக்கு திறக்கப்படுகிறது.
இன்றைய தினம் ராகு பெயர்ச்சி என்பதால் காலை 6 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மதியம் 1.30 மணிக்கு பூர்ணாஹூதி நிறைவு பெற்று, கடம்புறப்பட்டு மகா அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 2.16 மணிக்கு ராகு பெயர்ச்சி நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. ராகு பெயர்ச்சியின் போது அபிஷேகம், அலங்காரம் ஆகியவை யூ டிப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.