சென்னை: ’கேம் சேஞ்சர்’, ’வணங்கான்’, ’காதலிக்க நேரமில்லை’, ’மதகஜராஜா’ என பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்களே இந்த வார இறுதியிலும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழில் இந்த வாரம் புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. அந்த குறையைப் போக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஓடிடி தளங்களில் படங்கள், வெப் சீரியஸ்கள் வெளியாகி உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
சூது கவ்வும் 2
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்து 2013ஆம் ஆண்டு வெளியான, ‘சூது கவ்வும்’ படத்தின் அடுத்த பாகம் ‘சூது கவ்வும் 2’ என்ற பெயரில் உருவானது. மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ரமேஷ் திலக் என பலர் இதில் நடித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகம் அளவிற்கு இல்லை எனவும் பரவாயில்லை எனவும் விமர்சனங்களை பெற்ற ‘சூது கவ்வும் 2’ ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகியுள்ளது.
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் (Once Upon a Time in Madras)
பரத், சுஹைல், அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம், 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். சென்னையில் நடக்கும் வெவ்வேறு கதைகளை ஒரு புள்ளியில் இணைக்கக்கூடிய ஹைப்பர் லிங்க் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வந்த இத்திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று ஜனவரி 17ஆம் தேதி வெளியாகியுள்ளது.
ஃபேமிலி படம் (Family Padam)
’டைனோசர்’ படம் மூலம் மக்களுக்கு பரீட்சயமான உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஸ்ரீஜா ரவி, சந்தோஷ், மோகனசுந்தரம் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ’ஃபேமிலி படம்’. செல்வகுமார் திருமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். சினிமாவும் குடும்பமும் சம்பந்தப்பட்ட கலகலப்பான திரைப்படமாக ஃபேமிலி படம் வெளிவந்துள்ளது. கடந்த டிசம்பரில் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.
ஐ அம் காதலன் (I Am Kathalan)
'பிரேமலு' வெற்றியை தொடர்ந்து நஸ்லென், கிரிஷ் ஏ.டி கூட்டணியில் வெளியான திரைப்படம் 'ஐ அம் காதலன்'. நஸ்லெனுடன் திலீஷ் போத்தன், அனிஷ்மா அனில்குமார் அக்கியோர் நடித்துள்ளனர். தனது முன்னாள் காதலியை காதலை பழிவாங்குதை போன்று கலகலப்பான கதையாக அமைந்திருந்தது இத்திரைப்படம். கலவையான விமர்சனங்களை பெற்ற 'ஐ அம் காதலன்' படம் இன்று, ஜனவரி 17ஆம் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பணி (PANI)
மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ‘பணி’. ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் 'பணி' திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஜனவரி16ஆம் தேதிக்கு முன்பே 15ஆம் தேதி வெளியாகிவிட்டது. மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை பார்க்கலாம்.
ரைஃபிள் கிளப் (Rifle Club)
திலீப் போத்தன், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மலையாள படம் ‘ரைஃபிள் கிளப்’. வித்தியாசமான திரைக்கதை மற்றும் உருவாக்கத்தால் இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரைஃபிள் கிளப் திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பேக் இன் ஆக்சன் (Back in Action)
ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான Jamie Foxx, Cameron Diaz நடித்துள்ள படம் `Back in Action'. முன்னாள் சி ஐ ஏ உளவாளிகளான கணவன், மனைவி இருவரது ரகசிய அடையாளம் வெளியே தெரிந்த பின் நடக்கும் ஆக்சன் காமெடி அதகளமே இத்திரைப்படம். Seth Gordon இயக்கியுள்ள இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் நேரடி வெளியீடாக ஜனவரி 17ஆம் தேதி வெளியாகியுள்ளது.
த ரோஷன்ஸ் (The Roshans)
பாலிவுட்டின் பிரபல நடிகரான ஹிரித்திக் ரோஷன் மற்றும் அவரது ரோஷன்ஸ் குடும்பத்தினர் பற்றிய ஆவணத்தொடர் இது. ஹிரித்திக் ரோஷனின் தந்தையும் இயக்குநருமான ராகேஷ் ரோஷன் மற்றும் அவரது சித்தப்பா இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் இடம்பெற்றுள்ள இந்த ஆவணத்தொடர் ஜனவரி 17ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது..
பதாள் லோக் சீசன் 2 (Paatal Lok Season 2)
2020ல் வெளியான பாதாள் லோக் வெப் சீரியஸின் இரண்டாவது சீசன் இது. சென்ற சீசனில் பத்திரிகையாளர் ஒருவரின் கொலை முயற்சியை ஹதிராம் சௌத்ரி விசாரிப்பதன் வழியே கருத்து சுதந்திரம், அரசு இயந்திரம் ஆகியவற்றை விளக்கிய இந்த வெப் சீரியஸ், இப்போது வடகிழக்கு இந்தியாவிற்கு மாறியுள்ளது. மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் ’பதாள் லோக் - சீசன் 2’ ஜனவரி 17ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.