தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி-தனலட்சுமி தம்பதி. தம்பதிக்கு சாந்தகுமார் என்ற மகனும் இருந்துள்ளார். இவர்களின் குடும்பம் வறுமையின் பிடியின் சிக்கியதால் சென்னைக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டில் வாழும் தம்பதிகளால் 1979ஆம் ஆண்டு சாந்தகுமார் சிறுவயதிலேயே தத்து எடுக்கப்பட்டுள்ளார். டென்மார்க் தம்பதி இவருக்கு டேவிட் நெல்சன் என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.
டென்மார்க் தம்பதியினர் டேவிட்டை கடமைக்கு வளர்க்காமல், தங்களது சொந்த மகனைப் போல் வளர்த்து படிக்க வைத்துள்ளனர். தற்பொது 40 வயதாகும் டேவிட் அங்குள்ள பங்குச்சந்தை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். டென்மார்க்கில் வளர்ந்தாலும் நிறத்திலும், உருவத்திலும் வேறுபாடு இருந்ததால் டென்மார்க் பெற்றோரிடம் அதுகுறித்து டேவிட் கேட்டபோது, தன்னை தத்தெடுத்து வளர்த்ததாக உண்மையை கூறியுள்ளனர்.
இதையெடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியா வந்த டேவிட் எந்த ஆவணங்களுமின்றி தனது உண்மையான பெற்றோரை தேடியுள்ளார். இந்நிலையில் புனேவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் தனது வழக்கறிஞர் அஞ்சலிபவார் உதவியுடன் தொடர் முயற்சியில் ஈடுபட்ட டேவிட்டுக்கு, அவரை குழந்தையாக தத்து கொடுத்த பாதிரியார் ஜார்ஜ் என்பவரின் உறவினர்கள் மூலம், 40 வருடங்களுக்கு முன்பு தத்து கொடுத்ததற்கான சான்றிதழ், அவரது பெற்றோர்களின் புகைப்படம், பெற்றோர்களின் பெயர், தந்தை தச்சு தொழிலாளி போன்ற பல தகவல் கிடைத்துள்ளது.
பெற்றோர் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த ஒருவார காலமாக அம்மாபேட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் பழைய ஆவணங்களைக் கொண்டு தனது பெற்றோரை டேவிட் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அங்குள்ள முதியவர்கள், நீண்ட காலமாக வசிக்கும் அப்பகுதிவாசிகளிடம், தனது தாயின் புகைப்படத்தை காண்பித்து அந்த டேவிட் தேடி வருவது காண்போரின் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.