தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மக்கள் ஊரடங்கின்போது, பேருந்து நிலையத்தில், சாலையோரங்களில் ஆதரவற்றோர் மூதாட்டிக்கு உணவளிக்கச் சென்ற சமூக ஆர்வலரை வட்டாட்சியர் முன்னிலையில், காவல் துறையினர் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையொட்டி
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்படி, இன்று (மார்ச் 22) காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இதனால் பேராவூரணியில் கடைகள், உணவகங்கள், மருந்து, பால் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வெளியூரிலிருந்து வந்து தங்கி, உணவகங்களில் சாப்பிட்டு வேலை செய்து வருவோர், யாசகம் பெறுவோர், ஆதரவற்ற முதியோர்கள் ஆகியோர் உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில் பேராவூரணி முத்தழகப்பா சாலையில் வசித்து வரும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான மருத உதயகுமார் (30) என்பவர் தனது நண்பர் ஒருவருடன், காலை 10 மணியளவில் தனது வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவு, தண்ணீருடன் பழைய பேருந்து நிலையம், நிழற்குடைகளில் தங்கியிருந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு, உணவு அளித்துள்ளார். தொடர்ந்து, அண்ணா சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றபோது, அங்கிருந்த காவலர்கள் அவரை வழிமறித்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த வட்டாட்சியர் ஜெயலெட்சுமி முன்னிலையிலேயே தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத உதயகுமார் கூறுகையில், "உணவுப் பொட்டலங்களுடன் சென்ற என்னையும், எனது நண்பரையும் காவல் துறையினர் வழிமறித்து விசாரித்தனர். அவர்களிடம் நான் விவரத்தை தெரிவித்துக் கொண்டிருந்தேன். "உன்னை யார் வெளியில் வரச் சொன்னது. சாப்பாடு இல்லை என்றால், அதெல்லாம் சாகட்டும். உன்னுடைய லைசன்ஸ் எங்கே? இன்சூரன்ஸ் புக்கை எடு?" என்று கேட்டு, வண்டிச் சாவியைப் பிடுங்கிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே காவல் துறையினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மேற்படி உதயகுமார் கூறியதைப் போலவே காவலர்கள் பேசியுள்ளனர். காவல் துறையினரின் இச்செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுய ஊரடங்கு உத்தரவு: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய இளைஞர்கள்