தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சோழபுரத்தில், ஓரின சேர்க்கை விவகாரத்தில், மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் அசோக்ராஜ் (27) என்பவரை கொலை செய்து வீட்டிலேயே புதைத்து மறைத்த வழக்கில் முன்பு கொத்தனாராக பணியாற்றியவரும், தற்போது நாட்டு வைத்தியருமான கேசவமூர்த்தி (47) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேசவமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, வருகிற டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை வரை நீதிமன்ற காவலுக்குட்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், கடந்த 19ஆம் தேதி அசோக்ராஜின் உடல் பாகங்களைத் தோண்டி எடுக்கும் போது, அதில் மேலும் ஒரு மண்டை ஓடு கிடைத்துள்ளது. அதனால் அது 2021ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கும், கேசவமூர்த்தியின் மற்றொரு நண்பரான முகமது அனாஸ் உடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.
இருப்பினும் தடய அறிவியல்துறையினர் ஆய்வின் முடிவிற்கு பிறகே அது உறுதி செய்யப்படும். தற்போது வரை கேசவமூர்த்தி சத்தமில்லாமல் இரு கொலைகளை அரங்கேற்றி அது வெளியே தெரியாமல் மறைக்க, ஆடு வெட்டும் பெரிய கத்தியை கொண்டு உடலில் இருந்து தலையை துண்டித்தும், உடல் பாகங்கள் விரைவாக மண்னோடு மண்ணாவதற்காக தோலை உரித்தும், சதை பாகங்களை தனியாக வெட்டி எடுத்தும் புதைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனை இவர் தனித்து தான் செய்தாரா? அல்லது பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கேசவமூர்த்தியில் வீட்டில் இருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திகள், பிளேடுகள், அரிவாள்கள் போன்ற உபகரணங்களையும், நாட்டு மருந்து பொடிகள், மருந்து வகைகள், வீட்டில் வளர்த்த மூலிகை செடிகளையும் பறிமுதல் செய்து அதன் தன்மை, பயன்கள் குறித்து ஆய்வு செய்ய போலீசார் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே கேசவமூர்த்தி பயன்படுத்திய டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெயர்கள் இருந்ததால் இதில் யாரையேனும் கேசவமூர்த்தி கொலை செய்திருக்க கூடுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட அசோக் ராஜன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டப்பட்டதில் சில உடல் பாகத்தை கேசவமூர்த்தி சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
கேசவமூர்த்தி இந்த இரண்டு கொலைகளை தான் செய்தாரா? அல்லது தனக்கு இணங்காத வேறு யாரையானும் இப்படி கொடூரமாக கொன்றுள்ளாரா என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும். இந்நிலையில் நேற்று இரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், இன்று மீண்டும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.
தற்போது ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், ஆசிஸ் ராவத் முன்னிலையில் முதற்கட்டமாக வீட்டின் பின்பக்கம் உள்ள பகுதிகளை தோண்டும் பணி நடைபெறுகிறது. மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சோழா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை!