தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆதி தெருவைச் சேர்ந்த ராகேஷ் (7), அஜய் (6), ரக் ஷனா (11), ராகஸ்ரீ (5) மனிஷா (10), வர்ஷினி (7) ஆகிய ஆறு குழந்தைகளும் நேற்று (அக்.22) மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதையடுத்து அவர்கள் மாலை 5 மணிக்கு பிறகு திடீரென காணவில்லை.
அதனை அறிந்த பெற்றோர், பதற்றமடைந்து குழந்தைகளைத் தேட ஆரம்பித்தனர். இந்தச் செய்தி சற்று நேரத்தில் சமூக வலைதளங்களில் மாவட்டம் முழுவதும் பரவியது. இதற்கிடையில் பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டை முனிக்கோயில் சாலையில் ஆறு குழந்தைகள் நடந்து சென்று கொண்டிருப்பதாக பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு ஒருவர் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் குழந்தைகளை மீட்டனர். பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்நிலையம் வந்த பெற்றோர் தங்களது குழந்தைகள் என்பதை உறுதிசெய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் குழந்தைகள் வழிதெரியாமல் பொன்னவராயன்கோட்டைக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் மூன்று மாத பெண் குழந்தை மாயம்!