தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை மற்றும் பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்றம் இணைந்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1,330 திருக்குறளுக்கும் 1,330 கதைகளைக் கொண்ட 7 அடி உயர புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பட்டிமன்ற நடுவரும், பத்மஸ்ரீ கலைமாமணியுமான சாலமன் பாப்பையா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக, 7 அடி உயரப் புத்தகம் மற்றும் 133 அதிகாரம் கொண்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. மேலும், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டன. உலகப் பொதுமறை நூலான திருக்குறளை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 7 சீர்களை அடிப்படையாகக் கொண்டு, 1,330 திருக்குறளுக்கும், 133 எழுத்தாளர்களைக் கொண்டு 1,330 கதைகள் எழுதப்பட்ட 7 அடி உயர புத்தகமானது, உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
இதற்கான சான்றிதழை பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வெங்கடேசன், அகழ் கலை இலக்கிய மன்ற நிறுவனர் வினோதினியிடம் வழங்கினார். இதில் பல மாநிலங்கள் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு, 1,330 திருக்குறளுக்கும் 1,330 கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் கலந்து கொண்டு, தாங்கள் எழுதிய கதை புத்தகத்தினை அவர்கள் உருவப் படத்துடன் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பேசுகையில், “தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்தோறும் திருக்குறள் வகுப்பு மற்றும் திருக்குறளை முழுவதும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கி வருகிறது. திருக்குறளை தமிழ்ப் பல்கலைக்கழகம் வளர்தமிழ்ப் புலம் வாயிலாக ஒலி, ஒளி காட்சி மூலம் வடிவமாக மாற்றப்பட்டு, உலகத் தமிழர்களுக்கு பாடமாக சேர்க்கப்படும்”.
இது குறித்து எழுத்தாளர் சுதா கூறுகையில், “7 அடி உயர திருக்குறள் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி. இதில் 8 வயது முதல் 70 வயது மூத்தோர் வரை திருக்குறளுக்கு கதை எழுதி உள்ளனர். தமிழ்நாடு பாடநூலில் 1,330 திருக்குறள் கதைகளை நன்னெறி பாட நூலாக வைக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து எழுத்தாளர் பிரீத்தி கூறுகையில், “நான் இரண்டு வருடமாக எனக்கு கொடுக்கப்பட்ட திருக்குறளுக்கு கதை எழுதி உள்ளேன். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் புரியும் நடையில் கதைகளை எழுதி உள்ளேன்” என்றார்.
இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், வளர்தமிழ்ப் புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் வகையில், திருவள்ளுவர் வேடமணிந்த குழந்தைகள் வரவேற்று, பின்னர் ஸ்ரீ ஆடல்வல்லான் நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம், மற்றும் தமிழக கலாச்சார நடனங்கள் ஆகியவை நடைபெற்றன.
இதையும் படிங்க: உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! இந்திய வீரர்களுக்கு ஆறுதல்!