தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு, வளர்பிறை நான்காம் நாளான சதுர்த்தி தினத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா தொற்று பரவலையடுத்து, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், விநாயகர் சதுர்த்திக்கு பிறகு, ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல இந்து அமைப்புகள் தடையை மீறி விநாயகர் சிலைகளை வைப்போம் என அறிவித்திருந்த நிலையில், பழைய பாலக்கரை காமராஜர் சிலைக்கு அருகே இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பை சேர்ந்து பாலா என்பவர், ஐந்தடி உயரம் கொண்ட இராஜ விநாயகர் என்ற சிலையை வைத்து பிரதிஷ்டை செய்ய முற்பட்டுள்ளார்.
ஆனால் பூஜை தொடங்கவிருந்த நேரத்தில். கிழக்கு காவல் ஆய்வாளர் இராமமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர், அதிரடியாக செயல்பட்டு விநாயகர் சிலையை தனி வாகனம் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின் அச்சிலையை பாதுகாப்பாக மகாமக குளம் அருகேயுள்ள வீர சைவ பெரிய மடத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:நிரம்பிய அடவிநயினார்: வேளாண்மைக்குப் பயன்படாமல் தண்ணீர் வெளியேற்றப்படும் அவலம்!