தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில், பெரியசாமி என்பவர் அரிசிக் கடையில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து, பாலிஷ் செய்து வெளியில் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், அரிசிக் கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அச்சோதனையில் சுமார் 5 டன் ரேஷன் அரிசியை, 50 கிலோ எடையுடைய மூட்டைகளில் பாலிஷ் செய்து, இரண்டு வாகனங்களில் ஏற்றி, தார்பாய்கள் மூலம் மூடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் பெரியசாமியை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.